தந்தை பெரியார் கல்லூரியில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை
வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 100 நபர்களுக்கு சித்த மருத்துவ முறையில் குணப்படுத்தவற்கான சிகிச்சை தொடங்கியது.
வேலூர்,
வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 100 நபர்களுக்கு சித்த மருத்துவ முறையில் குணப்படுத்தவற்கான சிகிச்சை தொடங்கியது.
கொரோனா தொற்று
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,300 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. மற்றும் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதித்த 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
சித்த மருத்துவ முறையில்
இந்த நபர்களுக்கு சித்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அதன்படி வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் ஒருங்கிணைந்த வேலூர் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சுசிகண்ணம்மாவிடம் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வழங்கினார். இதில், டாக்டர் தில்லைவாணன், யோகா பயிற்றுனர் கவிதா, வேலூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
100 பேருக்கு...
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கல்லூரியில் முதற்கட்டமாக 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலை 50 பேர், மாலை 50 பேர் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 விதமான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அதைத்தவிர தினமும் மூச்சுப்பயிற்சி, யோகா மற்றும் மன அழுத்தத்தை குறைக்க ஆலோசனை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது. 100 பேருக்கும் ஒருவார காலம் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்து விடுவார்கள். குணமடையாத நபர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும்.
குணமடைந்து வீட்டிற்கு சென்ற நபர்கள் சில நாட்கள் சாப்பிட சித்த மருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.