கொரோனா காரணமாக நுழைவுத்தேர்வு ரத்து: வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அறிவிப்பு
கொரோனா காரணமாக நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக, வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் படிப்பதற்கு ஆண்டுதோறும், நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயரிங் படிப்புகள் இருக்கின்றன. வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திரா), போபால்(மத்தியபிரதேசம்) வளாகங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தற்போது நிலவும் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவ-மாணவிகள், பெற்றோர் பாதுகாப்பில் அக்கறைக் கொண்டு இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வை வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ரத்து செய்கிறது. மாணவ-மாணவிகள் பிளஸ்-2 இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் மதிப்பெண் அடிப்படையில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான என்ஜினீயரிங் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்கள் அந்த மதிப்பெண்ணையும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வந்தவுடன் அந்த மதிப்பெண்ணையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ugadmission@vit.ac.in என்ற மின்னஞ் சல் முகவரியிலும், 9566656755 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும், 18001020536 என்ற இலவச எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.