சேலம் முள்ளுவாடி கேட் வழியாக ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

சேலம் முள்ளுவாடி கேட் வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2020-07-09 22:39 GMT
சேலம், 

சேலம் தொங்கும் பூங்கா அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலை உள்ளது. இதன் அருகில் ஆத்தூர் செல்லும் சாலையில் சுந்தர் லாட்ஜ் பஸ் நிறுத்தமும் இருக்கிறது. மேலும் அஸ்தம்பட்டி, மரவனேரியில் இருந்து கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தினமும் முள்ளுவாடி கேட் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.

பெரும்பாலான வாகன ஓட்டிகள் புதிய பஸ் நிலையம், ஜங்ஷன் சென்று வர இந்த சுந்தர்லாட்ஜ் பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் சுந்தர் லாட்ஜ் பகுதியில் காலையிலும், மாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சுந்தர் லாட்ஜ் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையறிந்த சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் சாலையில் நின்று போக்குவரத்தை சரி செய்தார். மேலும் போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போக்குவரத்து போலீசாரும் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து இருந்த வாகன ஓட்டிகள் மட்டுமே முள்ளுவாடி கேட் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்த மற்ற வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து தமிழ்ச்சங்கம் சாலை வழியாக செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்