தந்தை-மகன் கொலை வழக்கு: கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார்.
கோவில்பட்டி,
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார்.
தந்தை-மகன் சாவு
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்களை கோவில்பட்டி ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அவர் கோவில்பட்டி ஜெயில், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினார். இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட பல்வேறு சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். அப்போது, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாரை கைது செய்து உள்ளனர்.
மாஜிஸ்திரேட்டு விசாரணை
இந்த நிலையில் கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று மீண்டும் விசாரணை மேற்கொண்டார். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை ஜெயிலுக்கு கொண்டு வந்தபோது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், அங்கு அளிக்கப்பட்ட மருத்துவ ஆவணங்களை மாஜிஸ்திரேட்டு பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த சில விசாரணை கைதிகளிடமும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த விசாரணை சுமார் 15 நிமிடம் நடந்தது.
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட்டு திடீரென்று விசாரணை நடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.