சுழற்சி முறையில் வேலூர் மண்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளை திறக்க அனுமதி - கலெக்டர் பேட்டி
வேலூர் மண்டித்தெரு, சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாநகரின் முக்கிய வியாபார மையமான நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, லாங்குபஜார், மெயின்பஜார், சுண்ணாம்புகாரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்துக் கடைகளும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டன. மாவட்டம் முழுவதும் காய்கறி, மளிகைக்கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் காய்கறி, மளிகை, நகை, துணிக்கடைகள் ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் திறக்கலாம் என்றும், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்க தடை நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வணிகர் சங்கத்தினர், நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, மெயின்பஜார், சுண்ணாம்புகாரத் தெருவை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கடைகள் குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஞானவேலுவிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த பகுதிகளில் கடைகளை திறப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினர், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. 900-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். 1,300 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு சித்த மருத்துவ முறையில் முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சுண்ணாம்புகாரத் தெருக்களில் உள்ள அனைத்து கடைகளும் சுமார் 3 மாத காலமாக மூடப்பட்டுள்ளன. வியாபாரிகளின் நலனை கருதி நேதாஜி மார்க்கெட்டை தவிர மண்டித்தெரு, சுண்ணாம்புகார தெரு, லாங்குபஜார், மெயின்பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஒருநாளைக்கு ஒருபகுதியில் உள்ள கடைகளும், மறுநாள் மற்றொரு பகுதியில் உள்ள கடைகளும் சுழற்சி முறையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள், பூக்கடைகள் தற்போது இயங்கி வரும் இடத்திலேயே தொடர்ந்து இயங்கும். மீதமுள்ள கடைகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.