ஜெயங்கொண்டம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
ஜெயங்கொண்டம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு மற்றும் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா?, பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்துள்ளனரா?, கிருமி நாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்தல், முக கவசம் அணியாத வாடிக்கையாளரை கடையினுள் அனுமதியாமை மற்றும் கடையின் முகப்பில் தொற்று நீக்க கரைசல் வைத்து கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளர் கைகளையும் தொற்று நீக்கம் செய்தல் ஆகிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும், உணவு பொருட்களில் விலை, தயாரிப்பு விபரங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் நடராஜன் மற்றும் அரியலூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து டீ கடைகளில் வடை மற்றும் இதர கார வகைகளை அச்சடிக்கப்பட்ட செய்தித்தாளில் வழங்குதல் கூடாது என்பது குறித்தும் எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாடு கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்களின் மீது மாவட்ட கலெக்டர் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் காலாவதியான பொருட்கள் மற்றும் அதிக நிறம் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் உணவுப்பொருட்களின் தரம் பற்றிய உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் அப்புகாரின் மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.