காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது
காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திய சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காலாப்பட்டு,
புதுவை பெரியகாலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு இந்த ஏ.டி.எம். மையத்தில் மர்மநபர் புகுந்து பணம் எடுக்கும் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்திவிட்டு அதன் அருகிலேயே அந்த நபர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, விசாரித்தனர். இதில், சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்.
ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டது குறித்து வங்கி மேலாளர் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகிருஷ்ணனை கைது செய்தனர். உண்மையிலேயே இவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்றாரா? அல்லது மனநிலை பாதிப்பால் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து பணம் எடுக்கும் எந்திரத்தை சேதப்படுத்தினாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.