சேலத்தில் ஒரே தெருவில் வசித்த 25 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய வெள்ளி வியாபாரி மீது வழக்கு

சேலத்தில் ஒரே தெருவில் வசித்த 25 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக வெள்ளி வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2020-07-07 22:27 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி கடந்த 4-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி சேலம் குகை சீரங்கன் தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி ஒருவருடைய வீட்டில் அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அப்போது அவர் ‘இ-பாஸ்’ பெறாமல் கடந்த மாதம் மராட்டியத்துக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கும், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொரோ னா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த வியாபாரி சீரங்கன் தெரு முழுவதும் சுற்றித் திரிந்து உள்ளார். இதனால் அந்த பகுதியில் உள்ள 86 வீடுகளில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சீரங்கன் தெரு பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அந்த வியாபாரி மீது செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் கொடுத்தனர். இதையடுத்து 25 பேருக்கு கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளி வியாபாரி போல வேறு சிலரும் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே தெருவில் 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்