ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்

முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2020-07-07 00:45 GMT
திருவண்ணாமலை,

முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முதல் தளத்தில் நேற்று கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாகவும் தங்களை கோரிக்கைகளை மனுவாக அனுப்பி வைத்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் சிலர் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் அன்சர்மில்லத், மாவட்ட செயலாளர் மாலிக்பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விடுதலை செய்ய வேண்டும்

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான ஆயுள் கைதிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் நலச்சங்க தலைவர் விமலநாதன் உள்பட நிர்வாகிகள் மற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் சுமார் 50 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நிவாரண உதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓடும் தனியார் பஸ்களில் கண்டக்டர்கள், டிரைவர்கள் என ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் வறுமையில் தவித்து வருகிறோம். நிவாரண உதவி கேட்டு பல முறை மனு அளித்துள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே வாழ்வாதாரம் இழந்த எங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்