தஞ்சையில் தனியார் பள்ளிக்கு சென்று வந்த 82 பேருக்கு கொரோனா பரிசோதனை
தஞ்சையில் தனியார் பள்ளிக்கு சென்று வந்த 82 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளி தாளாளர் மதுரைக்கு சென்று வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் பள்ளிக்கு வந்து சென்றதையடுத்து பள்ளி முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பள்ளிக்கு சென்று வந்த ஏறத்தாழ 140 மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி அலுவலர்கள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களை தஞ்சை கல்லுக்குளத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் வரவழைத்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் 50 பேருக்கும், நேற்று 32 பேருக்கும் என மொத்தம் 82 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளிக்கு சென்று வந்த ஒரு சிலர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) தெரியவரும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.