லாபத்துடன் இயங்கி வரும் ரெயில்களை தனியாருக்கு கொடுப்பதற்கு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் கண்டனம்

தென்னக ரெயில்வேயில் லாபத்துடன் இயங்கிவரும் ரெயில்களை தனியாருக்கு கொடுப்பதற்கு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-06 01:36 GMT
மதுரை,

இந்திய ரெயில்வே வாரியம், லாபம் ஈட்டிவரும் ரெயில்பாதைகளில் இயக்கப்படும் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு 109 ரெயில்களை வழித்தடங்களுடன் தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லாபத்துடன் இயங்கும்

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ரெயில்களில் தமிழகத்தில் மதுரை-சென்னை, கோவை-சென்னை, நெல்லை-சென்னை, கோவை-நெல்லை, சென்னை-திருச்சி, கன்னியாகுமரி-சென்னை ஆகிய ரெயில்கள் தனியாருக்கு கொடுக்கப்பட உள்ளன. மதுரையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னைக்கு மதியம் 12.20 மணிக்கு சென்றடைகிறது. நெல்லையில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது. நெல்லையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12.20 மணிக்கு கோவை ரெயில்நிலையம் சென்றடைகிறது.

இந்த வழித்தடங்கள் மட்டுமின்றி ரெயில்வே வாரியம் அறிவித்துள்ள நேரங்களும் மக்கள் அதிகளவு விரும்பி பயணிக்கும் நேரமாகும். ரெயில்வேக்கு லாபம் தந்து கொண்டுள்ள ரெயில் பாதையையும், ரெயில்களையும் தனியாருக்கு கொடுப்பதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு, ஏழைகளுக்கு ரெயில் பயணம் என்பது எட்டாக்கனியாகிவிடும்.

பொருளாதாரத்தை சீரழிக்கும்

வருமானம் குறைவாக உள்ள எத்தனையோ வழித்தடங்கள் தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் உள்ளன. அவற்றை தனியாருக்கு கொடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே, லாபத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் ரெயில்களை தனியாருக்கு கொடுப்பது என்பது ரெயில்வே துறையை சீரழித்துவிடும்.

இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பறிப்பதாகும். ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதற்கிடையே, இருக்கும் பணியிடங்களை சரண்டர் செய்யும் நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பது என்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்