மூதாட்டி உள்பட மேலும் 2 பேரின் உயிரை குடித்த கொரோனா சாவு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி உள்பட மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

Update: 2020-07-06 00:17 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதேநேரம் நேற்று முன்தினம் வரை 2 வாலிபர்கள் உள்பட 17 பேர் இறந்துவிட்டனர்.

இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 64 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

அதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவரும் நேற்று இறந்தார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. அதேநேரம் கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினமும் ஒன்றிரண்டு பேரின் கொரோனா பறித்து வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

74 பேருக்கு பாதிப்பு

மேலும் திண்டுக்கல்லில் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் உள்பட 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதில் நிலக்கோட்டை தாலுகாவில் 30 பேரும், நத்தம் தாலுகாவில் 21 பேரும், திண்டுக்கல் நகர் மற்றும் புறநகரில் 8 பேரும், பழனி தாலுகாவில் 3 பேரும், ஆத்தூர் தாலுகாவில் 5 பேரும், வேடசந்தூர் தாலுகாவில் 5 பேரும், குஜிலியம்பாறை மற்றும் கொடைக்கானல் தாலுகாவில் தலா ஒருவரும் பாதிக் கப்பட்டவர்கள் ஆவர்.

இதற்கிடையே கொரோனா தொற்று ஏற்பட்ட மருந்தாளுனர் பணியாற்றிய, திண்டுக்கல் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. மேலும் அங்கு வேலை செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கு சிகிச்சைக்காக சென்றவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்