தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அரசுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொற்று அதிகரிப்பு
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்பதால் நோயாளிகளை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
சுகாதார துறை கடிதம்
இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலாளர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண் ஆகியோருக்கு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் பிற மாநிலங்களை போல் விளையாட்டு மைதானம், திருமண மண்டபங்களில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வாய்ப்பு இல்லை. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதற்கான வாய்ப்புகள் உள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.