மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை சிவசேனா குற்றச்சாட்டு
மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
மும்பை,
மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
அமைதி இல்லை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டுவதற்காக அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆண்டு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
ஆனால் மேற்கண்ட நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ–்மீருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் வலிமையான அரசு இருந்த போதிலும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு- காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பாதது வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தெருக்களில் ரத்த ஆறு ஓடுகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். பயங்கரவாதிகளிடம் கள்ளப்பணத்தை ஒழிக்க பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட பிறகும் பயங்கரவாத அட்டூழியம் மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதயத்தை துளைத்த காட்சி
அண்மையில் ஒரு முதியவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவருடன் இருந்த அவரது பேரன் தாத்தா இறந்தது கூட தெரியாமல் அவர் மீது அமர்ந்து அவரை எழுப்ப முயன்ற காட்சி இதயத்தை துளைப்பதாக இருந்தது. இதுபோன்ற காட்சிகளை சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகளில் தான் காண முடியும்.
இந்த காட்சியை மத்திய மந்திரிகள் பலர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இது மத்திய அரசின் நிர்வாகக்குறைவு, திறமையின்மை என்பதை அந்த மந்திரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த புகைப்படம் நாட்டின் பெருமையை உலகளவில் மோசமாக்கி இருப்பதுடன், மத்திய அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த சிறுவனை ஒரு வீரர் காப்பாற்றி விட்டார். இப்போது அவர் காப்பாற்றிவிட்டார். ஆனால் எதிர்காலத்தில் அது முடியுமா?. இதை தெரிவிக்க மத்திய அரசிடம் பதில் இருக்கிறதா?
சீனர்களுக்கு எதிராக...
காஷ்மீர் பூர்வீக குடிமக்களான பண்டித்கள் இன்னும் அங்கு செல்ல முடியவில்லை. கடந்த மாதம் கூட ஒரு பண்டித் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். காஷ்மீரில் கடந்த 6 மாதங்களாக பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நமது வீரர்கள் பல பயங்கரவாதிகளை ஒழித்து உள்ளனர். ஆனால் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யும் நமது வீரர்களின் உயிரிழப்பும் குறைவாக இல்லை. காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள் மற்றும் லடாக்கில் உள்ள சீனர்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.