அரூரில் பரபரப்பு, கத்தரிக்கோலால் குத்தி வேன் டிரைவர் கொலை - தையல் கடைக்காரர் கைது

அரூரில் கத்தரிக்கோலால் குத்தி வேன் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தையல் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-06-11 22:15 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கல்லடிப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 34). இவர் அரூரில் தையல் கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு அதே பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் லட்சுமணன் (31) அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் அந்த கடைக்கு சென்றார். அவருடைய அண்ணனான வேன் டிரைவர் செந்தில் (34) என்பவரும் அப்போது அந்த கடைக்கு சென்றுள்ளார். அங்கே பேசிக்கொண்டிருந்தபோது லட்சுமணனுக்கும், மூர்த்திக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து லட்சுமணனின் மார்பில் குத்தினாராம்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தகராறை தடுக்க சென்ற செந்திலின் வயிற்றிலும் கத்தரிக்கோலால் மூர்த்தி குத்தினார். இதில் படுகாயமடைந்த லட்சுமணன், செந்தில் ஆகியோர் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்