கோபியை சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா ; சென்னையில் சிகிச்சை பெறுகிறார்

கோபியை சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2020-06-11 06:17 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கும், சூளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அபுதாபியில் இருந்து சத்தியமங்கலம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்தது.

கடந்த 8-ந் தேதி மொடக்குறிச்சி அருகே உள்ள விளக்கேத்தியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஈரோட்டை சேர்ந்த 40 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்து இருந்தது. ஆனால் கல்லூரி மாணவி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்தார். மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் அவர்களது பெயர்கள் ஈரோடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. எனவே நேற்று முன்தினம் நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 73 ஆக மாறியது.

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோபிக்கு வந்த அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது முகவரியை கோபிசெட்டிபாளையம் என்று குறிப்பிட்டு இருந்ததால், கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 74 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த 3 மாதங்களாக அவர் சென்னையில் தங்கியிருந்ததால், ஈரோடு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சென்னை மாவட்ட பட்டியலில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்