சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் பஸ்சில் திருவனந்தபுரம் பயணம்
சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல வெளி மாநில தொழிலாளர்கள் பஸ்சில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.;
நாகர்கோவில்,
சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல வெளி மாநில தொழிலாளர்கள் பஸ்சில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
வெளிமாநில தொழிலாளர்கள்
குமரி மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகலாந்து மாநிலம் மற்றும் வழியோர மாநில தொழிலாளர்கள் பயணம் செய்யும் வகையில் நேற்று மதியம் 2 மணிக்கு ஒரு தனி ரெயில் புறப்பட்டுச் சென்றது.
இந்த ரெயிலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த நாகலாந்து மாநில தொழிலாளர்கள் 62 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவரும் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
பயணம்
அதன்படி நேற்று காலை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாகலாந்து மாநில தொழிலாளர்கள் 40 பேரும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேரும் நாகர்கோவில் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுப்பொட்டலங்கள், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் அரசு பஸ்சில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் அவர்களை வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் வினோத், கோலப்பன், அப்துல்லா மன்னான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு கை அசைத்தபடி புறப்பட்டுச் சென்றனர்.
ராபர்ட் புரூஸ்
முன்னதாக இந்த தொழிலாளர்களுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பிரட், பிஸ்கட் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற வடமாநில தொழிலாளர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர் சேவை மையத்தில் பதிவு செய்தவர்கள் என்று ராபர்ட் புரூஸ் கூறினார்.