அருப்புக்கோட்டையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

அருப்புக்கோட்டையில் விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

Update: 2020-06-09 03:41 GMT
அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கால், விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் இந்த தொழிலை மட்டும் நம்பியுள்ள குடும்பங்கள் வருமானம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றன. போக்குவரத்து தொடங்காததால், ஏற்கனவே உற்பத்தி செய்த சேலைகள் அனைத்தும் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் விசைத்தறி இயங்க தொடங்கியுள்ளது.

ஆனால் தேங்கியுள்ள சேலைகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதால், உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் தொழிலாளர்களின் சம்பளத்திலும் 30 சதவீதம் வரை பிடித்தம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கருப்பு கொடி

இதுகுறித்து விசைத்தறி உற்பத்தியாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், கடந்த 4 மாதங்களாகவே உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் ஜவுளி சந்தைகள் மற்றும் ஜவுளி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து இல்லாததால் உற்பத்தி செய்த சேலை ரகங்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. நெசவாளர்கள் தொடர்ந்து தொழில் செய்வதற்காக விசைத்தறி மூலம் நெய்யப்பட்ட சேலைகளை குறைந்து விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்தோம். இதனால் அதிக அளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களின் இழப்பை ஈடு செய்ய நெசவாளர்களின் கூலியை தற்காலிகமாக குறைத்து கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஆனால் விசைத்தறி உரிமையாளர்களின் இந்த செயலை கண்டித்து நெசவாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் சந்திரமோகன், சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா, கன்வீனர் ராஜா, அண்ணாதுரை, நகர செயலாளர் காத்தமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்