கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் கைது
கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். தனது மனைவியை மிரட்டுவதற்காக அவருடன் தொடர்பில் இருந்த நபரின் கையை துண்டித்து அவருக்கு பரிசாக கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 3-ந் தேதி திருவண்ணாமலை சாலையில் ஒரு சுடுகாட்டில் கை தனியாக துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் முன்பு கிடந்தது. இந்த கொலை குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கொலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தமிழரசன் (35) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் லாரி டிரைவராக இருக்கிறேன். என் மீது கொலை முயற்சி மற்றும் அடி-தடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த போது எனக்கும், பாரதியார் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் நான் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்தேன்.
இந்த நேரத்தில் எனது மனைவி கர்ப்பமானாள். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் அவளுடன் பாலசுப்பிரமணி என்கிற ராஜிபாய் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தது தெரிய வந்தது. இதை கைவிடுமாறு நான் எனது மனைவியிடம் கூறினேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டேன்.
அதன்படி கடந்த 3-ந் தேதி பாலசுப்பிரமணியனை மது குடிப்பதற்காக அழைத்து சென்றேன். அங்கு போதையில் இருந்த அவரது வலது கையை துண்டித்து கொலை செய்தேன். பிறகு கையை ஒரு பையில் வைத்துக் கொண்டு நேராக பாரதியார் நகருக்கு வந்தேன். அங்கு வீட்டில் இருந்த எனது மனைவியிடம் நீ கள்ளத்தொடர்பு வைத்திருந்தவனின் கையை இதோ உனக்கு பரிசாக கொண்டு வந்துள்ளேன். அவனையும் தீர்த்து கட்டி விட்டேன். இனி நீ வேறு யாருடனும் தொடர்பு வைத்தால் இந்த கதி தான் அவர்களுக்கும் என்று கூறி விட்டு தலைமறைவாகி விட்டேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.