மாவட்டத்தில் 40 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறிக்கக்கூடாது, சிறப்பு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பங்களாமேட்டில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் தலைமையிலும், அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பில் நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளம் மூன்றாந்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரபீக் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதுபோல் மற்ற இடங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.