குமரி மாவட்டத்தில் தொடர் மழை தண்டவாளத்தில் மண் சரிவு; பார்சல் ரெயில் ரத்து சீரமைப்பு பணி தீவிரம்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பார்சல் ரெயில் ரத்து செய்யப்பட்டது.

Update: 2020-06-09 00:43 GMT
அழகியமண்டபம்,

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பார்சல் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் தண்டவாளம் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

ரெயில் போக்குவரத்து

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அத்துடன் பார்சல் ரெயிலும் இயங்குகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இரணியல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது.

இதில் பூங்கரையில் மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. தண்டவாளத்தில் 50 மீட்டர் முதல் 60 மீட்டர் நீளத்திற்கு பெரிய கற்கள், மண் சரிந்து கிடந்தது. இரவு நேரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இதை கண்டு இரணியல் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் பார்சல் ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

சீரமைப்பு பணி

நேற்று காலையில் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. எனவே, வீடுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் மண் அகற்றும் பணி மெதுவாக நடந்தது. பயணிகள் ரெயில் போக்குவரத்து தற்போது இல்லாததால் மண்சரிவு ஏற்பட்ட போது பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாள சீரமைப்பு பணி முழுமையாக முடிவடைந்த பின்பு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதே பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.

இரணியல்- குழித்துறை இடையேயான தெங்கன்குழியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள மக்களிடம் மண்சரிவு தொடர்பாக கேட்டறிந்தார்.

பின்னர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறுகையில், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவால் இந்த பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக ரெயில்வே நிர்வாகமும், குமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் மண் சரிவு ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துண்டிக்கப்பட்ட சாலை, குடிநீர் குழாய்களையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

வசந்தகுமார் எம்.பி.

இதற்கிடையே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பருவமழை காலத்தில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இரணியல், பள்ளியாடி போன்ற பகுதிகளில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்படுவது தொடர் கதையாகி வருகின்றன. இதனால், அடிக்கடி ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தற்போது இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் சரக்கு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரெயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டி மண்சரிவு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்