பழுது பார்க்க சென்றபோது உயர்அழுத்த மின் கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்தது மற்றொரு லாரி, மோட்டார் சைக்கிளும் எரிந்ததால் பரபரப்பு

பழுது பார்க்க சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு லாரி, மோட்டார்சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-09 00:25 GMT
பூந்தமல்லி,

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 49). இவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி பழுதானதால் நேற்று மாலை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் கடைக்கு கொண்டு சென்றார்.

அப்போது கடையின் மேல்புறம் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் கன்டெய்னர் பெட்டி உரசியது. இதில் கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பரவியதால் அதன் டயர் தீப்பிடித்து, லாரி முழுவதும் பரவியது. உடனடியாக டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

தீ மளமளவென அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு லாரி மற்றும் இரண்டுக்கும் நடுவில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளுக்கும் பரவியது. மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், 3 வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கன்டெய்னர் லாரியின் முன் பகுதியும், லாரி மற்றும் மோட்டார்சைக்கிளும் எரிந்து நாசமானது. தீ விபத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்று வேடிக்கை பார்த்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்