சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 84 பேர் டிஸ்சார்ஜ்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 84 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Update: 2020-06-07 03:15 GMT
சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 84 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பிறமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் தனிமை வார்டில் 150-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் குணமடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

84 பேர் டிஸ்சார்ஜ்

இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 பெண்கள் உள்பட 84 பேர் குணம் அடைந்து விட்டதால் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராமன், அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அவர்களுக்கு, சத்தான உணவு பொருட்கள் வழங்கி வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.

இதில் குணமடைந்தவர்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பலரை அவர்களது உறவினர்கள் வந்து தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனை

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 பேர் இன்று (நேற்று) குணமடைந்து விட்டதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குணம் அடைந்தவர்களுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் யாருடைய உதவியும் இன்றி வீட்டில் தனியாக வசித்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுத்து வருகிறோம். இவர்களுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்