ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த 1,650 தொழிலாளர்கள் ரெயிலில் பயணம்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த 1,650 தொழிலாளர்கள் நேற்று புறப்பட்டனர்.

Update: 2020-06-07 01:58 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த 1,650 தொழிலாளர்கள் நேற்று புறப்பட்டனர்.

ஒடிசா -மேற்கு வங்காளம்

ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே பல ஆயிரம் பேர் புறப்பட்டு சென்று விட்டனர். மேலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் வட மாநிலத்தவர்களை உரிய பாதுகாப்புடன், ரெயில்களில் அனுப்பி வைக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி நேற்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 450 பேர், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 1,200 பேர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாநிலம் வாரியாக வட மாநில தொழிலாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் முகவரி சரிப்பார்க்கப்பட்டு, குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

1,600 பேர்

ஈரோடு மல்லிகை அரங்கம், மாநகராட்சி திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்களை ரெயிலில் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 500 பேர் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்ற அவர்கள் கோவையில் இருந்து வந்த ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதுபோல் மாலை 6 மணிக்கு திருப்பூரில் இருந்து ஒடிசா செல்லும் ரெயிலில் ஈரோட்டில் இருந்து 450 தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் கோவையில் இருந்து மேற்கு வங்காளம் சென்ற ரெயிலில் மேலும் 700 பேர் ஈரோட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மட்டும் 3 ரெயில்களில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த 1,650 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரோடு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் செய்திகள்