நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்

சொட்டு நீர் பாசனம் அமைக்க 4,350 எக்டர் பரப்பளவுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

Update: 2020-06-06 06:16 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் நிகழாண்டுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 4,350 எக்டர் பரப்பளவுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் 19 சதவீதம் ஆதிதிராவிடருக்கும், ஒரு சதவீதம் பழங்குடியினர் வகுப்பினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், தண்ணீர் மற்றும் மண் ஆய்வறிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

மேலும் நுண்ணீர் பாசனத் திட்டத்துடன் இணைந்த துணை நீர் மேலாண்மை செயல்பாடு என்கிற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி MIMS என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் இதர விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம். அல்லது ஆலத்தூர் வட்டாரத்தில் 8838448116 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்டாரத்தில் 9786377886 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 6379246587 என்ற எண்ணிலும், வேப்பூர் வட்டாரத்தில் 6383062564 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்