கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா நிறைவு

மதுரை கள்ளழகர் கோவிலில் நடந்த வசந்த உற்சவ விழா நிறைவுபெற்றது.

Update: 2020-06-06 02:28 GMT
அழகர்கோவில், 

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில்  நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் இருந்து புறப்பாடு ஆகி 18-ம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு தீபாராதனை நடந்தது. அதன்பின் அங்குள்ள வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது. இதைபோலவே தொடர்ந்து தினமும் இதே மண்டபத்தில் விழா நடந்தது. நேற்று மாலையில் 10-ம் நாள் விழாவில் தேவியர்களுடன் கள்ளழகர் பெருமாள் வசந்த மண்டபத்திற்கு சென்று எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. சர்வ அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாளும், ஸ்ரீதேவி பூமி தேவியர்களும் காட்சி தந்தனர். தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். தொடர்ந்து 10 நாள் நடந்த இந்த வசந்த உற்சவ விழாவில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் விதிமுறைக்கு உட்பட்டு கோவில் பட்டர்களும், பணியாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து இதில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை மேலாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்