அரசு விதிகளை பின்பற்றி மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

அரசு விதிகளை பின்பற்றி மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-05 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் நடைபெறாத சூழலில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். இதனால் திருமணங்களை நடத்த அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி அனுமதி அளிக்க வேண்டும்.

அதன்படி சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க, அந்த நிகழ்ச்சியில் இரு நபர்களை எங்கள் செலவில் வேலைக்கு அமர்த்தி பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்துவோம். மண்டபங்களில் ஏசி பயன்படுத்தாமல், திருமணம் நடத்த அனுமதி தரலாம்.

மண்டபத்தின் நுழைவுவாயிலில் கிருமிநாசினி கண்டிப்பாக பயன்படுத்த அறிவுறுத்தலாம். 200 பேர் அமரும் மண்டபத்தில் 100 பேர் அமர்ந்தும், 6 பேர் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் 3 பேர் அமர்ந்தும் சாப்பிடலாம்.

போட்டோ வீடியோ எடுக்கும்போது இடைவெளிவிட்டு நிற்கலாம். காலையில் ஆரம்பித்து மதியம் 2 மணிக்குள் திருமணத்தை முடிக்க அறிவுறுத்தலாம். இவ்வாறு திருமணம் நடத்த அரசு அனுமதி தரும் பட்சத்தில், அந்த திருமண வேலைகளை செய்யும் நாங்கள் அனைவரும் அரசு உத்தரவை மதித்து செயல்படுத்தி திருமணங்களை பாதுகாப்புடன் நடத்துவோம்.

இதன் மூலம் பல ஆயிரம் திருமணம் சார்ந்த தொழில் செய்து வரும் டெக்கரேட்டர்கள் ஒலி ஒளி அமைப்பாளர்கள், பந்தல் கலைஞர்கள், கேட்டரிங் சர்வீஸ் தொழிலாளர்கள், பூமாலை வியாபாரிகள், ஒப்பனைக் கலைஞர்கள், புரோகிதர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். திருமண வைபவங்களை நம்பி இருக்கும், இவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். எனவே கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடத்த அனுமதி தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்