இலங்கையில் இருந்து திருப்பூர் வந்த 10 பேரின் ரத்த மாதிரி சேகரிப்பு திருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கும் மருத்துவ சோதனை

இலங்கையில் இருந்து திருப்பூருக்கு வந்த 10 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கும் மருத்துவ சோதனை செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-06-04 05:43 GMT
திருப்பூர்,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. அதன்படி 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல் ஊரடங்கு காலத்தில் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகளையும் அரசு முடக்கி வைத்திருந்தது. தற்போது சில தளர்வுகள் விதிக்கப்பட்டு இந்த போக்குவரத்து செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா கண்காணிப்பை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

இலங்கையில் இருந்து திருப்பூர் வந்த...

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் தற்போது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. அதன்படி இலங்கையில் இருந்து திருப்பூருக்கு வந்த 10 பேர் உள்பட 11 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-

இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து, அங்கிருந்து திருப்பூருக்கு வந்த மங்கலம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண், ஆலங்காடு பகுதியை சேர்ந்த 66 வயது ஆண், காங்கேயம் கேசவநாயக்கன்பட்டியை சேர்ந்த 51 வயது ஆண், வெள்ளகோவில் உத்தமபாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண், 40 வயது ஆண், வெள்ளகோவில் காமராஜர்புரத்தை சேர்ந்த 46 வயது ஆண், ஊத்துக்குளிரோட்டை சேர்ந்த 58 வயது ஆண், தாராபுரம் கொழிஞ்சிவாடியை சேர்ந்த 23 வயது ஆண், பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண், 60 வயது பெண் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த திருப்பூர் சென்னப்பநகரை சேர்ந்த கூலி தொழிலாளியான 60 வயது ஆண் ஆகிய 11 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்