மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சியில் மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
திருச்சியில் மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி
திருச்சி பீமநகரில் மளிகைக்கடை நடத்தி வரும் எலியாஸ்(வயது 45) நேற்று முன்தினம் கடையில் இருந்தபோது, அவரிடம் பீமநகர் பென்சனர் தெருவை சேர்ந்த அஜ்மல்(39), பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த ஹூசைன்(52) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 2 பேரையும் பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் பல் உடைப்பு
* திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த குமரகுரு(25) ஸ்ரீரங்கம் கீதாபுரம் படித்துறை காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை தாக்கி பல்லை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பாலாஜி(24), மங்கம்மா நகரை சேர்ந்த ராஜேஷ்(24), முத்துகுமார்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ஸ்ரீரங்கம் கீதாபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(34), தனது நண்பர்கள் சிலருடன் கீதாபுரம் படித்துறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த திருச்சி வரகனேரி ரம்பக்கார தெருவை சேர்ந்த மணிகண்டன்(20) உள்ளிட்ட 12 பேர் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சதீஷ்குமாரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் 11 பேரை தேடி வருகிறார்கள்.
பெண்ணை அவமானப்படுத்தியவர் கைது
* திருவானைக்காவலில் பூ விற்பனை செய்து கொண்டிருந்த ஸ்ரீரங்கம் கண்டிதெருவை சேர்ந்த பாக்கியத்தை(44) அவமானப்படுத்தியதாக மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்த பாலுமகேந்திரனை (22) ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.
* திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக வயலூர் வாசன்வேலி பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்தை(63) உறையூர் போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள் மீது வழக்கு
* திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அனுமதியின்றி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க(கட்சி சார்பற்றது) திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை மற்றும் 70 விவசாயிகள் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளம்பெண் மாயம்
* திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்த திருச்சி கீழப்புதூரை சேர்ந்த கிரேசி (22) சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் மாயமான கிரேசியை தேடி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் ஆண் பிணம்
* திருச்சி காந்தி படித்துறை அருகில் காவிரி ஆற்றில் சுமார் 35 வயதுடைய ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. ரோஜா நிறத்தில்மேல்சட்டை மட்டும் அணிந்து இருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின் மோட்டார்கள் பறிமுதல்
* ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் செயல் அதிகாரி பிரகந்த நாயகி உத்தரவின் பேரில், பேரூராட்சி ஊழியர்கள் பத்மசாலியர் தெரு மற்றும் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியில் சோதனை செய்த போது, 2 வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2 மின் மோட்டார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொரி வியாபாபரி பலி
* வையம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொரி வியாபாரி பெரியசாமி (60) நேற்று மலையடிப்பட்டி அருகே ஆத்துப்பாலம் பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகனம் பறிமுதல்
* மணப்பாறையில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் டிப்பர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரித்த போது அனுமதியின்றி மண் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாத்திர தொழிலாளி தற்கொலை
* திருச்சி புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாத்திர தொழிலாளி கோபால்(41) மது குடித்து கொண்டு ஊதாரித்தனமாக திரிந்தார். அதை அவரது மனைவி சாருலதா தட்டிக்கேட்டதால், மனமுடைந்த கோபால், மதுவில் எலிமருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நிதி நிறுவன ஊழியர் சாவு
* பெட்டவாய்த்தலை பழங்காவேரியை சேர்ந்த நிதிநிறுவன ஊழியர் செந்தில்குமார் (38) மோட்டார் சைக்கிளில் சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.