வள்ளியூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரி வள்ளியூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-26 22:15 GMT
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பண்டார பெருங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 437 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்திற்கு கொடுமுடியாறு அணையில் இருந்து வடமலையான் கால்வாய் மூலம் தண்ணீர் வந்து பெருகி வரும். வடமலையான் கால்வாயில் பண்டார பெருங்குளம் கடைசி குளம் ஆகும். இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் பெரும்பாலும் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வந்தனர்.

தற்போது பெய்த மழையினால் கொடுமுடியாறு அணையின் மூலம் வடமலையான் கால்வாயில் இருந்து தண்ணீரை பண்டார பெருங்குளத்திற்கு திறந்து விடவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3 நாட்கள் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டனர். ஆனால் முறையாக தண்ணீர் குளத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று வள்ளியூரில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த உதவி பொறியாளர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதனை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்