வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-23 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ்நாரணவரே முன்னிலை வகித்தார்.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பொன்னாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்களுடைய வீடு இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பொன்னாக்குடி சமத்துவபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறோம்.

எங்களுக்கு 1998-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த வீட்டில் தான் 22 வருடங்களாக வசித்து வருகிறோம். இந்த வீடு இருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை.

இதனால் வீட்டை பழுதுபார்க்கமுடியவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பூர்வீக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், புதிரை வண்ணான் இனத்தை சேர்ந்த எங்கள் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்புக்காக சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. உடனே சாதி சான்றிதழ் கிடைக்கவும், இலவச வீட்டு மனைப்பட்டா கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிஉள்ளனர்.

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் ஊருக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. சில நேரங்களில் சாக்கடை கலந்து தண்ணீர் வருகிறது. தெருவிளக்கு எரியவில்லை. குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

சங்கர்நகர் அருகே உள்ள பண்டாரகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கின்ற மாணவ-மாணவிகளை ஒரு ஆசிரியை அடித்து துன்புறுத்துகிறார். எனவே அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பெரியார்நகர், எம்.ஜி.ஆர்.நகர் தாமஸ் சாலை இணைப்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தமிழ்புலிகள் கட்சியினர் துணை செயலாளர் இளந்தமிழன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்