நெல்லையில் குறைதீர்க்கும் கூட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2019-12-20 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கிரு‌‌ஷ்ணபிள்ளை, நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ்நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2 விவசாயிகளுக்கு விசை தெளிப்பான் கருவிகளையும், ரூ.1¾ லட்சம் மதிப்பீட்டில் ஒரு விவசாயிக்கு பவர் டிரில்லரையும், ரூ.1 லட்சத்தில் ஒரு விவசாயிக்கு சுழற்கலப்பையையும் கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார். மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விதை, நாற்று விதைகளையும், கால்நடை தீவன குச்சிகளையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 814.80 மில்லி மீட்டர். ஆனால் இதுவரை 1050 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 29 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அணைகளில் நீர் இருப்பு அதன் கொள்ளளவில் 93 சதவீதம் உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை நெல் 15 ஆயிரத்து 129 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 174 ஹெக்டேரிலும், பயறு வகைப்பயிர்கள் 1,173 ஹெக்டேரிலும், பருத்தி 341 ஹெக்டேரிலும், கரும்பு 31 ஹெக்டேரிலும், எண்ணெய் வித்து பயிர்கள் 285 ஹெக்டேரிலும், ஆக மொத்தம் 17 ஆயிரத்து 133 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்வாய் பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணி முதல் நெற்பயிர் தூர் கட்டும் நிலை வரை உள்ளது.

உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் பூச்சியினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் ஒரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் நெற் பயிருக்கு காப்பீடு செய்ததற்கு விதைக்க இயலாமல் போன 7 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்த 4 ஆயிரத்து 537 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சம் இந்த மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயி சொரிமுத்து:- பயிர்க்காப்பீடு செய்ய உரிய கால அவகாசம் அளிக்கவில்லை. கால்வாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும். மணிமுத்தாறு பகுதியில் வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும்.

கலெக்டர்:- பயிர்க்காப்பீடு செய்ய உரிய கால அவகாசம் அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதுவோம். வனவிலங்குகள் உள்ளே வாராமல் இருக்க ஒரு மருந்தில் சணல் நனைத்து அதனை கட்ட வேண்டும். இதுகுறித்து அந்த பகுதியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

விவசாயி ஆபிரகாம்:- மானூர் பகுதியில் உரத்தட்டுப்பாடு உள்ளது. யூரியாவை தவிர மற்ற உரங்கள் வாகைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இல்லை. உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சுதாகர் பாலாஜி:- சுவிஷேசபுரம் குளத்திற்கு நம்பியாற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைத்து தண்ணீர் வழங்கவேண்டும். அந்த குளத்தை தூர்வாரவேண்டும். கருமேனியாறு-நம்பியாறு- தாமிரபரணி இணைப்பு திட்டமான வெள்ளநீர் கால்வாய் திட்டத்தின் 4-வது கட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து தொடங்கவேண்டும்.

கலெக்டர்:- வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சுவிஷேசபுரம் குளத்திற்கு நம்பியாற்றில் இருந்து தனி கால்வாய் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு நடத்தி சாத்திய கூறுகள் உள்ளதா? என்று அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான் முடிவு செய்யமுடியும். குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரும்படையார்:- களக்காடு பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 2016-2017-ம் ஆண்டு நெற் பயிருக்கு பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.

மானூர், அழகியபாண்டியபுரம், செட்டிக்குறிச்சி பகுதியில் உளுந்து பயிரிட்ட விவசாயிகள், தொடர்மழையால் உளுந்து பயிர் அழுகி அறுவடை செய்யமுடியாத நிலையில் உள்ளனர். உளுந்து பயிரிட்டவர்கள் நிவாரணம் கேட்டு, அழுகிய உளுந்து செடியுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 50 ஏக்கரில் உளுந்து பயிரிட்டு மழையால் நாசமாகிவிட்டது. 65 நாட்கள் பயிரிட்டு விளைச்சலுக்கு தயாராக உள்ள உளுந்துகள் இப்போது பெய்த மழையால் சாம்பல் நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் பயிர்க்காப்பீடு செய்ய போதிய அவகாசம் இல்லாததால் சிலர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். எனவே நிவாரணம் வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் இருப்பதற்கு இடம் கூட கிடைக்காது. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் மாவட்டம் பிரிந்து சென்றதால் விவசாயிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. 3 மணி நேரம் நடைபெறக்கூடிய இந்த கூட்டம் 45 நிமிடங்களிலேயே முடிந்தது.

மேலும் செய்திகள்