பாளையங்கோட்டையில் தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகள் பறிமுதல் - உதவி கலெக்டர் நடவடிக்கை

பாளையங்கோட்டையில் தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-12-19 22:45 GMT
நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் பூதத்தான் பிள்ளை (வயது 85). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய முதல் மனைவி அம்மாபொண்ணு, 2-வது மனைவி பார்வதி. இதில் பார்வதியின் மகன் முருகன், அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பூதத்தான் தனக்கு சொந்தமான 8 சென்டில் உள்ள 7 வீடுகளையும் முருகனுக்கு பத்திரம் எழுதிக்கொடுத்தார். அந்த வீடுகளை முருகன், அவருடைய மனைவி சாந்தியின் பெயருக்கு மாற்றி உள்ளார்.

சொத்துகளை எழுதி வாங்கியபோது தன்னுடைய தந்தையை பராமரித்து கொள்வதாக முருகன் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் தந்தையை பராமரிக்காமல் விரட்டி உள்ளார். இதையடுத்து பூதத்தான், மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள தன்னுடைய மூத்த மனைவியின் மகன் மகாலிங்கம் வீட்டுக்கு சென்று தங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக பூதத்தானுக்கும், முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தந்தையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார், முருகன் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தன்னை சரியாக பராமரிக்காததால், தான் எழுதி கொடுத்த சொத்துகளை மகனிடம் இருந்து மீட்டுத்தருமாறு பூதத்தான் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா, உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே ஆகியோரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே விசாரணை நடத்தினார். பின்னர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்-2007-ன் கீழ் பூதத்தான், முருகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளுக்கான பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் அந்த சொத்துகள் மீண்டும் பூதத்தான் வசம் வந்துள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கானஆணையை உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே நேற்று பூதத்தானை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து அவரிடம் வழங்கினார்.

இதுகுறித்து உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே கூறுகையில், ‘‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் வயது முதிர்ந்த காலத்தில் தங்களுடைய பிள்ளைகள் தங்களை பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் சொத்துகளை எழுதி கொடுக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் பராமரிக்காமல் விட்டால் அந்த சொத்துகளை இந்த சட்டத்தின் மூலம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மேலும் முதியோர்கள் தங்களது சொத்துகளை எழுதி கொடுக்கும்போது, தங்களை பராமரித்துக் கொள்வார் என்ற அடிப்படையில் என்ற வாசகத்தை குறிப்பிடுவது அவர்களது நலனுக்கு உகந்தது’’ என்றார்.

மேலும் செய்திகள்