காவல்கிணறில் மொபட்டில் சென்ற பெண் எல்.ஐ.சி. முகவரிடம் 15 பவுன் நகை பறிப்பு

காவல்கிணறில் மொபட்டில் சென்ற பெண் எல்.ஐ.சி. முகவரிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 15 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

Update: 2019-12-19 22:30 GMT
பணகுடி, 

நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்துள்ள ஆவரைகுளத்தை சேர்ந்த ஜெயராம் மனைவி ஆனந்தி(வயது41). எல்.ஐ.சி.முகவர். இவர் நேற்று மதியம் 1 மணியளவில் தன்னுடைய மொபட்டில் காவல் கிணறு சந்திப்பு சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காய்கனி மார்க்கெட் அருகில் அவர் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு வந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் மொபட்டை ஓட்டி சென்று கொண்டிருந்த ஆனந்தி கழுத்தில் கிடந்த 15 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருநபர் பறித்து கொள்ள, மற்றொரு நபர் வேகமாக செலுத்தினார். இதில் நிலை தடுமாறி மொபட்டுடன் கீழே விழுந்த ஆனந்தி ‘திருடன்...திருடன்’ என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த 2 மர்மநபர்களும் 15 பவுன் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

மொபட்டுடன் கீழே விழுந்த ஆனந்திக்கு தலை, உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்து சென்ற 2 மர்மநபர்களை தேடிவருகிறார்.

பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண் எல்.ஐ.சி. முகவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்