காதலியுடன் சேர்ந்து கணவரே கொலை செய்த வழக்கு: வள்ளியூரில் புதைக்கப்பட்ட கேரள பெண் உடல் தோண்டி எடுப்பு

காதலியுடன் சேர்ந்து கணவரே கொலை செய்து வள்ளியூரில் வீசப்பட்ட கேரள பெண்ணின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-18 23:30 GMT
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் வள்ளியூர்-ஏர்வாடி மெயின் ரோடு அருகே உள்ள முட்புதரில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சென்றனர்.

அங்கு இறந்து கிடந்த பெண் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து இருந்தார். யாரோ மர்ம நபர்கள் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு உடலை இங்கு வந்து வீசிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரின் உடல் வள்ளியூர் பெரியகுளம் கரை அருகே புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது 45) என்பவர் தனது மனைவி வித்யாவை (40) காணவில்லை என்று அங்குள்ள உதயம்பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தார். அதன்பேரில் வித்யாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் தேடி வந்தனர்.

அப்போது அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவனந்தபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதே சமயத்தில் பிரேம்குமாரின் செல்போன் சிக்னலும் அங்கு இருந்தது தெரியவந்தது. இதனால் பிரேம்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே வள்ளியூரில் இறந்து கிடந்த பெண் குறித்த தகவல் கேரள போலீசாருக்கு கிடைத்தது. அப்போது, அங்கு இறந்து கிடந்த பெண் வித்யா என்பதை போலீசார் உறுதிசெய்தனர். பின்னர் இந்த வழக்கை கேரள போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பிரேம்குமார், சுனிதாபேபி (45) என்ற பெண்ணுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேம்குமார், சுனிதாபேபி ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதன் விவரம் வருமாறு:-

பிரேம்குமார் படித்த பள்ளியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரேம்குமார் கலந்து கொண்டார். அப்போது, பள்ளியில் படிக்கும் காலத்தில் தான் காதலித்த சுனிதாபேபியை அவர் சந்தித்தார். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் காதல் மலர்ந்து உள்ளது. தொடர்ந்து அவர்கள் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் வித்யாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து பிரேம்குமார், சுனிதா பேபிக்கு தெரிவித்தார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி பிரேம்குமார், சுனிதாபேபியுடன் சேர்ந்து வித்யாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றனர். அங்கு வித்யாவுக்கு கட்டாயமாக மது கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து வித்யாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை பிரேம்குமார் தனது காரில் ஏற்றிக் கொண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு வந்து ஒரு முட்புதரில் வீசிச்சென்றது தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், சுனிதாபேபியை கைது செய்தனர்.

வித்யாவின் உடல் வள்ளியூரில் புதைக்கப்பட்டதால் வழக்கு விசாரணைக்காக மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று பிரேம்குமார், சுனிதாபேபி ஆகியோரை உதயம்பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் வள்ளியூருக்கு அழைத்து வந்தனர். வள்ளியூர் பெரிய குளக்கரையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடல் ராதாபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் கேரள டாக்டர் சசிகலா தலைமையிலான மருத்துவ குழுவினர் வித்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர். காதலியுடன் சேர்ந்து கணவரே கொலை செய்த கேரள பெண் உடல் வள்ளியூரில் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்