பாளையங்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் - கலெக்டரிடம் கோரிக்கை மனு

பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கடைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-09 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்திப்பு பஸ் நிலையத்தை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் டவுன் மார்க்கெட்டையும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தையும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள 66 கடைகளை இடித்து விட்டு புதிய வணிக வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது.

அதற்காக கடைகளை வருகிற 19-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அங்குள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வியாபாரிகள் ஒன்று திரண்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் ‌ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:-

பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி தொடர்பாக பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் எந்தவித கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. வியாபாரிகள் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் தினசரி தவணை மூலம் கடன்களை திருப்பி செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் உரிய காலஅவகாசம் கொடுக்காமல் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி கூறிஉள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து, அங்கு கடைகளும் அமைத்து எங்களுக்கு வழங்க வேண்டும். பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணி முடிந்த பிறகு மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்