கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் விவகாரம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய அதிகாரிகள் குழு ஆய்வு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் எதிரொலியாக அங்கு மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-11-28 22:45 GMT
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ர‌ஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு தற்போது மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதற்கு முதலில் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அடுத்த நாளே இந்திய அணுமின் கழகம் சைபர் தாக்குதல் குறித்து ஒப்புக்கொண்டது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாக இருப்பதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் பிரச்சினையாக இருப்பதாலும் இதுகுறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தினார். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

இதையடுத்து மத்திய சைபர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் குழுவினர் கூடங்குளத்தில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டு பல குழுக்களாக பிரிந்து அங்குள்ள கம்ப்யூட்டர்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் கம்ப்யூட்டர் தகவல் பாதுகாப்பு தணிக்கை குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மத்திய சைபர் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜே‌‌ஷ் தலைமையில் இந்த ஆய்வு அறிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இணையதள கம்ப்யூட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கம்ப்யூட்டர்களில் தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்