தென்காசி அருகே, ஆயிரப்பேரியில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் - கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் பேட்டி

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் கலெக்டர் அலுவலகமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் அமைகிறது என மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தெரிவித்தார்.

Update: 2019-11-24 22:45 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன், நேற்று தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்காசி புதிய மாவட்டம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் அரசு விதைப்பண்ணைக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலம் உள்ளது.

அங்கு புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகமும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் அமைக்கப்பட உள்ளது. அதுவரை தற்காலிகமாக தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தில் இன்னும் 2 வாரங்களில் செயல்படும்.

இதற்காக தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1.25 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் ரூ.4 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று, அங்கும் கலெக்டர் அலுவலகம் இயங்கும்.

நாளை (அதாவது இன்று) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சுப்புராஜா மஹாலில் நடக்கும். கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் தமிழக எல்லையில் கொட்டப்படுவது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு நடமாடும் மருத்துவ வாகனம் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்