வாசுதேவநல்லூர் அருகே வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம்

வாசுதேவநல்லூர் அருகே ஓடை ஆக்கிரமிப்பால் வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

Update: 2019-11-17 22:00 GMT
வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அருகே ஓடை ஆக்கிரமிப்பால் வயலுக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

ஓடை ஆக்கிரமிப்பு

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தலையணை ஆற்று பகுதிக்கு தென்பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கன்னிமாவூத்து ஊற்றுப்பகுதி உள்ளது. இங்கிருந்து ஓடை வழியாக 8 கிலோமீட்டர் தொலைவில் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்துவழி கிராமத்துக்கு மேற்கே உள்ள நாரணபேரி குளத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த குளத்துக்கு மேற்பகுதியில் வாசுதேவநல்லூரை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது வயல் பகுதி உள்ளது.

தற்போது அங்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அவரது வயல் பகுதியின் வடபுறம் சுமார் 6 அடி அகலத்திற்கு ஓடை செல்கிறது. இந்தநிலையில் அந்தோணிசாமியின் வயல்பகுதிக்கு வடபுறம் உள்ள மற்றொருவர் அவரது இடத்தை விரிவுபடுத்தும்போது, தன்னுடைய இடத்தின் வழியாக ஓடை செல்ல கூடாது என கருதி ஓடையின் குறுக்கே முட்புதர்கள் மற்றும் மணல் திட்டுகளால் அடைத்தார். இதனால் அந்தோணிசாமியின் வயல் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து, நெற்பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் அங்கு இருந்த 200 எலுமிச்சை மரங்கள் சேதம் அடைந்தன.

ந‌‌ஷ்டஈடு

இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய ந‌‌ஷ்டஈடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து ஓடை தண்ணீர் செல்லும் பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்