நெல்லையில் தொடர் மழை: 2 வீடுகள் இடிந்து சேதம்; மரங்கள் சாய்ந்தன அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லையில் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகள் இடிந்தன. மேலும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2019-11-17 23:00 GMT
நெல்லை, 

நெல்லையில் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகள் இடிந்தன. மேலும் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தொடர் மழை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அம்பை, ஆய்க்குடி, சேரன்மாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பலத்த மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாபநாசம் அணை நீர் மட்டம் நேற்று முன்தினம் 128.05 அடியாக இருந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 128.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 653 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 269.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 130.12 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர் மட்டம், நேற்று காலை 139.70 அடியாக உயர்ந்தது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 63.50 அடியாக இருந்தது. நேற்று காலை நீர்மட்டம் 67.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,168 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்தனர்.

மரம் சாய்ந்தது

அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக முண்டந்துறை ஆற்றுப்பாலம் ரோட்டின் ஓரத்தில் நின்ற மரம் நேற்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த முண்டந்துறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரத்தில் மதுரை- தென்காசி சாலையில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. தகவல் அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர்- வெள்ளிகுளம் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த பழமைவாய்ந்த மருத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. அம்பை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் புளியங்குடி அருகே சிங்கிலிபட்டியில் கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. சொக்கம்பட்டி போலீசார் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் பல இடங்களில் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. நெல்லை டவுனில் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாராபுரம், அழகநேரி, கரையிருப்பு உள்ளிட்ட பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

2 வீடுகள் இடிந்தன

நெல்லை தச்சநல்லூர் பாலாஜி அவென்யூ பகுதியில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர் மழையின் காரணமாக தச்சநல்லூர் அருகே உள்ள மேல ஊருடையான்குடியிருப்பு பகுதியில் காசியானந்தன், லட்சுமி ஆகியோரது வீடுகள் இடிந்தன. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கருப்பந்துறையில் பாலம் மற்றும் குறுக்குத்துறை முருகன் கோவிலை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடியது. நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பாளையங் கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்- 50, சேர்வலாறு- 81. மணிமுத்தாறு- 52.8, கடனா- 50, ராமநதி- 40, கருப்பா நதி- 29, குண்டாறு- 9, அடவிநயினார்- 16, அம்பை- 42.60, ஆய்க்குடி- 23.60, சேரன்மாதேவி- 12, நாங்குநேரி- 2, பாளையங்கோட்டை- 42, சங்கரன்கோவில்- 7, செங்கோட்டை- 6, சிவகிரி- 31, தென்காசி- 24.30, நெல்லை- 35.

மேலும் செய்திகள்