கந்துவட்டி கும்பல் தாக்குதல்: மனைவி-3 குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கும்பல் தாக்கியதால் தொழிலாளி தனது மனைவி, 3 குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-14 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பீடி காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 35), பெயிண்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 28). இவர்களுக்கு தனலட்சுமி (8), இசக்கிராஜா (7), சூரியபிரகா‌‌ஷ் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தனலட்சுமி 4-ம் வகுப்பும், இசக்கிராஜா 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

நேற்று காலையில் அருள்தாஸ், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் கையில் மண்எண்ணெய் கேன் வைத்து இருந்தார். நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருள்தாசை மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லக்கூடாது என எச்சரித்தனர்.

அப்போது திடீரென்று அருள்தாஸ் கேனில் இருந்த மண்எண்ணெயை தனது மனைவி, குழந்தைகள் மீது ஊற்றினார். அவரும் உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டார். மேலும் அவர் சிறிதளவு மண்எண்ணெயை குடித்துவிட்டார். பின்னர் அவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தொழிலாளி அருள்தாஸ் கூறியதாவது:-

நான், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் குடும்ப செலவுக்காக வாங்கினேன். அப்போது அவர் ஒரு வட்டி என கூறினார். அதற்கு மாறாக 10 சதவீதம் வட்டி என்னிடம் வசூல் செய்தார். வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கொடுத்தேன். 5 ஆண்டுகளில் ரூ.2½ லட்சம் வரை கொடுத்தேன். கடந்த 2 மாதங்களாக என்னால் வட்டி கட்ட முடியவில்லை.

இதனால் பணம் கொடுத்த நபர், மற்றொருவருடன் எனது வீட்டுக்கு வந்தார். அவர் இன்னும் ரூ.1½ லட்சம் பாக்கி தர வேண்டும் என்று என்னை மிரட்டினர். ஏற்கனவே ரூ.2½ லட்சம் கொடுத்துவிட்ட நிலையில், அந்த தொகையை என்னால் தர முடியாது என்று கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் என்னை தாக்கி, அவதூறாக பேசினர்.

பின்னர் அந்த 2 பேரும் கந்து வட்டியை கேட்டு மிரட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அவமானம் அடைந்த நான் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன். போலீசார் எங்களை தடுத்து விட்டனர். என்னை கந்துவட்டி கேட்டு மிரட்டும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017-ம் ஆண்டு செங்கோட்டை அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்