பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி, நெல்லை வண்ணார்பேட்டையில் பொதுமக்கள் நேற்று நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2019-11-13 22:00 GMT
நெல்லை, 

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை மூடக்கோரி, நெல்லை வண்ணார்பேட்டையில் பொதுமக்கள் நேற்று நூதன போராட்டம் நடத்தினர்.

பாதாள சாக்கடை

நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்று பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக கழிவு நீரேற்றும் நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு குழி தோண்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த குழியில் மழை நீர், கழிவு நீர் தேங்கி உள்ளது. இந்த குழியில் யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக அதனை சுற்றி தகரத்தினை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நூதன போராட்டம்

ஆனால் அந்த தடுப்பையும் தாண்டி கால்நடைகள் குழிக்குள் விழுந்து இறந்து விடுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் குழியை சுற்றி அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அவர்கள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதுவரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்