ராதாபுரம் அருகே பயங்கரம்: என்ஜினீயரிங் மாணவர் கொடூரக்கொலை - தந்தையை பிடித்து போலீசார் விசாரணை

ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-11-12 23:00 GMT
ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 45), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு வேல்முருகன் (19) என்ற மகனும், சந்தனகுமாரி (17) என்ற மகளும் உள்ளனர்.

வேல்முருகன் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சந்தனகுமாரி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

முத்துவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி தனது மகள் சந்தனகுமாரியை அழைத்துக் கொண்டு பணகுடியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் முத்து, வேல்முருகன் மட்டும் இருந்தனர். கடந்த 2 நாட்களாக முத்துவின் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வேல்முருகன் கல்லூரிக்கு வராததால், நண்பர்கள் சிலர் நேற்று அவரை தேடி சீலாத்திகுளத்துக்கு வந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

வீடு பூட்டப்பட்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்களும், அக்கம்பக்கத்தினரும் வீடு முன்பு திரண்டு கதவை தட்டினர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. உடனடியாக இதுகுறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் வேல்முருகன் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, முத்து தலைமறைவாகி இருந்ததால் அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடினர். நேற்று மாலையில் கும்பிகுளம் அருகே மதுபோதையில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். வேல்முருகன் கொலை குறித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

குடும்ப பிரச்சினையில் தூங்கும்போது வேல்முருகனை முத்து அடித்துக் கொடூரமாக கொலை செய்து விட்டு வீட்டை பூட்டி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். வேல்முருகன் கொலைக்கான காரணம் என்ன? அவரது கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என முத்துவிடம் ராதாபுரம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்