சங்கரன்கோவில் நகரசபையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை

சங்கரன்கோவில் நகரசபையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களில் பழைய வேட்பாளர் சீட்டுகளை அகற்றி முதல்நிலை பரிசோதனை நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Update: 2019-11-06 22:45 GMT
சங்கரன்கோவில், 

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி,செங்கோட்டை, அம்பை, விக்கிரமசிங்கபுரம் ஆகிய 7 நகரசபைகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த அக்டோபர் 3-ந் தேதி சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

கர்நாடகம் மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து 2,151 வாக்குப்பதிவு எந்திரங்களையும், யத்கிர் மாவட்டத்தில் இருந்து 1,135 கட்டுப்பாட்டு எந்திரங்களையும் 2 கன்டெய்னர் லாரிகளில் சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 7 நகரசபைகளுக்கான 1,800 வாக்குப் பதிவு எந்திரங்கள், 900 கட்டுப்பாட்டு கருவிகள் சங்கரன்கோவில் நகரசபையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

மீதமுள்ள 351 வாக்குப்பதிவு எந்திரங்களும், 215 கட்டுப்பாட்டு எந்திரங்களும் நெல்லை மாநகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள வேட்பாளர்கள் சீட்டுகளை அகற்றி பரிசோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 7 பொறியாளர்கள் சங்கரன்கோவில் நகரசபைக்கு வந்தனர். நகரசபை ஆணையர் ப.சந்தானம் தலைமையில் மேலாளர் லட்சுமணன் மேற்பார்வையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

சங்கரன்கோவில் நகரசபை பணியாளர்களுடன் அம்பை நகரசபை பணியாளர்களும் இணைந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் இருந்த வேட்பாளர்கள் சீட்டுகளை அகற்றினர். பின்னர் அதிலிருந்து சீல்களையும் அப்புறப்படுத்தினர். பெல் நிறுவன பொறியாளர்கள் ஒவ்வொரு எந்திரத்தையும் பரிசோதனை செய்தனர். எந்திரத்தில் உள்ள பட்டன்களையும், அதில் உள்ள எல்.இ.டி. பொருத்தப்பட்ட பல்புகளையும் பரிசோதனை செய்தனர். நேற்று காலையில் தொடங்கிய இந்த முதல்நிலை பரிசோதனை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. 

மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா உத்தரவின்பேரில் இந்த பணி நடந்து வருகிறது. இன்று(வியாழக்கிழமை) புளியங்குடி,விக்கிரமசிங்கபுரம் நகரசபை பணியாளர்களும், நாளை (வெள்ளிக் கிழமை) கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகரசபை பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் செய்திகள்