புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் - த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

Update: 2019-11-03 22:15 GMT
தென்காசி, 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தென்காசியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்தில் ஹேக் செய்ததாக வந்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த அக்டோபர் 10-ந் தேதி இந்த அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ளது. இதற்கு இதுதான் காரணம் என சந்தேகம் ஏற்படுகிறது. நமது நாட்டில் பாதுகாப்பான அணுமின் நிலைய விவகாரத்தில் அன்னிய நாட்டு சக்தி ஊடுருவியது ஆபத்தானதாகும்.

இவ்வாறு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்நிலையம் செயல் இழந்து வருகிறது. இது அந்த பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கையானது பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களின் கல்வி உரிமைகளை பாதிப்பதாக உள்ளது. இதனை கண்டித்து பேராசிரியர் ராமு மணிவண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பில் வருகிற 9-ந் தேதி சென்னை விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்படும் மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் தென்காசி மாநகர் எல்கைக்குள்ளேயே அமைய வேண்டும். தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில த.மு.மு.க. செயலாளர் மைதீன் சேட்கான், மாவட்ட தலைவர் முகம்மது யாகூப், செயலாளர் அகமதுஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, பொருளாளர் முகமது பிலால் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நேற்று மாலையில் தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட த.மு.மு.க. மற்றும் ம.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். 

மேலும் செய்திகள்