நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் இருந்த 103 கடைகள் இடித்து அகற்றம்

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் இருந்த 103 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

Update: 2019-10-22 22:00 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் இருந்த 103 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

சந்திப்பு பஸ் நிலையம்

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடி செலவில் புதுப்பித்து கட்டப்பட உள்ளது. இந்த பஸ்நிலையத்தின் வெளிப்புறம் 126 கடைகளும், தெற்கு பகுதியில் 17 கடைகளும் உள்ளன. இந்த கடைகளை அகற்றவேண்டும் என்று நெல்லை மாநகராட்சி சார்பில், அங்கு கடை வைத்து உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்களில் சிலருக்கு வருகிற 2-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பஸ்நிலைய வளாகம், மற்றும் அந்த பகுதியில் உள்ள 103 கடைகளை நேற்று நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கரன், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்தனர். சில கடைகளை உரிமையாளர்களே அகற்றினர். இடிக்கப்பட்ட கடைகளில் பாகங்கள் உடனுக்குடன் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டன. கடைகள் அகற்றப்பட்டதையொட்டி நெல்லை வருவாய் ஆய்வாளர் அருணாசலம் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போக்குவரத்து நெருக்கடி

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தபோது நேற்று காலையில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலையில் வாகன போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது.

மேலும் செய்திகள்