வடகிழக்கு பருவமழை மீட்பு பணிக்கான கருவிகள் தயார் - மாவட்ட தீயணைப்பு அதிகாரி தகவல்

வடகிழக்கு பருவமழையின் போது மீட்பு பணிக்கான கருவிகள் தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி மகாலிங்கமூர்த்தி கூறினார்.

Update: 2019-10-19 21:30 GMT
நெல்லை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி திடீர் ஆய்வு செய்தார்.

அங்குள்ள ‘தெர்மல் இமேஜிங் கேமரா’ ரப்பர் படகுகள், ஹைட்ராலிங் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள் மற்றும் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மகாலிங்கமூர்த்தி கூறுகையில், தீவிபத்து நடக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப நிலையை தூரத்தில் இருந்து கணிக்க உதவும் தெர்மல் இமேஜிங் கேமரா, கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிருடன் இருப்பவர்களை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்டறியும் நவீன கேமரா உள்ளிட்டவை தீயணைப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கருவிகள் உள்பட வடகிழக்கு பருவமழையின் போது மீட்பு பணிக்கு தேவையான அனைத்து கருவிகளும், வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது” என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்