திசையன்விளை அருகே மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திசையன்விளை அருகே பள்ளிக்கூட மாணவி படுகொலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-18 22:45 GMT
திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள உவரி கூட்டப்பனையைச் சேர்ந்தவர் வினிஸ்டன். இவருடைய மனைவி வினிதா. இவர்களுடைய மகள் இளவரசி (வயது 12). இவள் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று இளவரசி பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தாள்.

பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவள் திரும்பி வரவில்லை. பின்னர் அவள் தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் பகுதியில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் உடலில் நகக்கீறல்கள் உள்ளன. இதனால் அவளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு, உடலை பக்கத்து வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னரே மாணவியின் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டப்பனை பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களை விடுவித்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி நேற்று காலை கூட்டப்பனை பஸ் நிறுத்தம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உவரி- திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம், உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற உடன் சாவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாசில்தார் ஆவுடைநாயகத்திடம் அளித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்