நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மழைநீரில் அடித்து வரப்பட்ட பாம்பு கடித்து மாணவி பலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மழை நீரில் அடித்து வரப்பட்ட பாம்பு கடித்து மாணவி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2019-10-17 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் விடிய, விடிய லேசான மழை பெய்து உள்ளது. நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பிற்பகலில் லேசான மழை பெய்தது. ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது.

அம்பை, மணிமுத்தாறு, பாபநாசம், ராதாபுரம், செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், பகுதிகளில்யில் நேற்று பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே மருதாத்தாள்புரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர வேலாயுதம். இவருடைய மனைவி ராமலட்சுமி, இவர்களுடைய மகன் உதயகுமார், மகள் அஜிதா (வயது 11). இவள் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மருதாத்தாள்புரம் கிராமத்தில் பலத்த மழை பெய்தது. ராமச்சந்திரன் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறம், தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் அவரது வீட்டின் உள்ளே புகுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணி அளவில் அஜிதா வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு சென்றார். அப்போது மழைநீரில் அடித்து வரப்பட்ட பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அஜிதாவை கடித்தது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அஜிதாவை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அஜிதா சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்மட்டம் அதிகமாக இருந்த குண்டாறு, கருப்பாநதி ஆகிய 2 அணைகள் நிரம்பின. இதையடுத்து அணைகளுக்கு வருகிற தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 337 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 106.30 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 119.22 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.20 அடியாகவும், கடனாநதி -71 அடியாகவும், ராமநதி -76 அடியாகவும், கொடுமுடியாறு -31 அடியாகவும், அடவிநயினார் அணை 122.50 அடியாகவும் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பாபநாசம் -11, சேர்வலாறு -9, மணிமுத்தாறு -23, கடனா -20, ராமநதி -30, கருப்பாநதி -6, குண்டாறு -4, நம்பியாறு -20, கொடுமுடியாறு -35, அடவிநயினார் -4,

அம்பை -5, ஆய்குடி -4, சேரன்மாதேவி -9, நாங்குநேரி -13, பாளையங்கோட்டை -16, ராதாபுரம் -45, சங்கரன் கோவில் -18, செங்கோட்டை -2, சிவகிரி -9, தென்காசி -6, நெல்லை -10.

மேலும் செய்திகள்