மத்திய அரசால் தமிழகத்தில் வீசப்பட்ட குப்பைகளையும் அகற்ற வேண்டும் - முத்தரசன் பேட்டி

“கடற்கரையில் மோடி குப்பைகளை அள்ளியது மட்டும் போதாது, மத்திய அரசால் தமிழகத்தில் வீசப்பட்ட குப்பைகளையும் அகற்ற வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-10-13 22:00 GMT
நெல்லை,

சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வந்தது வரவேற்கத்தக்கது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியில் சமநிலை எட்டப்பட வேண்டும். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார்.

கோவளம் கடற்கரையில் கிடந்த கழிவுகளை மோடி அப்புறப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மத்திய அரசால் கொட்டப்பட்ட குப்பைகள் ஏராளம் உள்ளது. அதாவது பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, ஹைட்ரோ கார்பன் திட்டம், கூடங்குளம் அணுக்கழிவு மையம், நீட் தேர்வு உள்ளிட்ட குப்பைகள் அதிக அளவு காணப்படுகிறது. இந்த குப்பைகளை மத்திய அரசு உடனடியாக அகற்ற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மூத்த தலைவர் நல்லகண்ணு பிரசாரம் செய்ய உள்ளார். 17-ந் தேதி முன்னாள் மாநில தலைவர் தா.பாண்டியன் பிரசாரம் செய்கிறார்.

நாங்குநேரி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொழில் பூங்கா திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அதே போல் களக்காடு பகுதியில் ஏராளமான வாழை விவசாயிகள் உள்ளனர். அங்கு வாழைத்தார் பதப்படுத்தும் மையம் மற்றும் விற்பனை சந்தை அமைக்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த திட்டங்களை நிறைவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டியில் தி.மு.க.வும், நாங்குநேரியில் காங்கிரசும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், பொருளாளர் சுப்பையா, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச் செயலாளர் சடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்